கறம்பக்குடி அருகே மயான பாதை இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் 2 குளங்களை தாண்டி பிணத்தை தூக்கி செல்லும் அவலம்
கழுத்தளவு தண்ணீரில் 2 குளங்களை தாண்டி பிணத்தை தூக்கி செல்லும் அவலம்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் ஊராட்சியைச் சேர்ந்த கெண்டையன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம் அதே கிராமத்தில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அனைத்து சமூகத்தினருக்கான இந்த மயானத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள பெரியகுளம், புதுக்குளம் ஆகிய 2 குளங்களை தாண்டிதான் செல்ல வேண்டும். இதனால் மழை காலங்களில் யாராவது இறந்தால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராம கெண்டையார் என்ற முதியவர் நேற்று இறந்தார். கடந்த ஒரு வாரமாக கறம்பக்குடி பகுதியில் பெய்த கனமழையால் பெரியகுளம், புதுக்குளம் ஆகிய 2 குளங்களிலும் கழுத்தளவை தாண்டி தண்ணீர் இருந்தது. இருப்பினும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முதியவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பாடையில் ஏற்றப்பட்ட முதியவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் நீந்தி எடுத்து சென்று தகனம் செய்தனர். 2 குளங்களை தாண்டி எடுத்து சென்றதை பார்த்து அப்பகுதி பெண்கள் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் கதறி துடித்தனர்.இதுகுறித்து அப்பகுதி இளைஞர் அமைப்பினர் கூறுகையில், கிராம பகுதிகளில் மயானங்கள் சமூக பாகுபாட்டுடன் தனி, தனியாக இருக்கும் நிலையில் எங்கள் கிராமத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே மயானம் இருப்பது பெருமைக்குரியது. அதே வேளையில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மயானத்திற்கு பாதை இல்லை, மயான கொட்டகை இல்லை என்பது வேதனையாக உள்ளது. பல ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகபட்சம் இறந்தவர் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து சொல்வோம் தற்போதுதான் கழுத்தளவை தாண்டி எடுத்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் பெரும் அச்சமாகிவிட்டது. எனவே அவசர முக்கியத்துவம் கருதி கெண்டையன்பட்டி கிராமத்திற்கு மயான பாதை அமைத்து தரவேண்டும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story