கொரோனா தடுப்பூசி போடும் நேரத்தை குறைக்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா தடுப்பூசி போடும் பணி நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், சுகாதார பணியாளர்களுக்கு பணிச்சுமை இருப்பதாக கூறி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மரகதம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக பணி மேற்கொள்வதால் ஊழியர்கள் சோர்வடைகிறார்கள். எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ஆணையிட வேண்டும்.
வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம்
தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்வதால், சனிக்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தர்ணா போராட்டம்
இதையடுத்து, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க சுகாதார செவிலியர்கள் சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது செவிலியர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story