அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 20 Nov 2021 12:32 AM IST (Updated: 20 Nov 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

குளித்தலை, 
ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. 1,017 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருநாள் அன்று மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ரெத்தினகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின்னர் கோவிலின் மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதுபோல் கோவிலின் அடிவாரம் முதல் மலை உச்சிவரை உள்ள 1,017 படிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் பக்தர்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். 
3 நாட்கள் எரியும்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் நேற்று ஏற்பட்ட மகா தீபம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் அணையாமல் எரியும் வகையில் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளையொட்டி குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜைகள் செய்து வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், வீட்டின் வாசலிலும் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர்.
கார்த்திகையையொட்டி குளித்தலையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். கார்த்திகை திருவிழாவையொட்டி பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மாலை 6.50 மணியளவில் மேளதாளங்கள் முழங்க பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி-சவுந்தரநாயகி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கணம்புல்ல நாயனார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சொக்கப்பனை
தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணியளவில் கோவில் வெளிப்புறத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அப்போது தீபம் சுடர்விட்டு எரிந்தது. அதனை பக்தர்கள் பயபக்தியுடன் இருகரம் கூப்பி தரிசித்தனர். பின்னர் சுவாமிகளின் திருவீதியுலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தி அதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உப்புகளை போட்டு வழிபட்டனர். பிறகு தீயில் கருகி எரிந்த பனை ஓலை குச்சிகளை தங்களது விளை நிலங்களில் நட்டுவைப்பார்கள். இதன் மூலம் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சிவன் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதன்படி ஆர்.டி.மலை, சின்னரெட்டிபட்டி, சிவாயம், இடையபட்டி, மேலகம்பேஸ்வரம் ஆகிய ஊர்களில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் சிவன் கோவில்களில் நேற்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 20 ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதேபோல் பாதிரிபட்டி ஊராட்சி நோட்டுக்காரன்பட்டியில் காளியம்மன், கருப்பசாமி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Next Story