தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வீணாகும் குடிநீர்
தஞ்சை தெற்குவீதியில் வீரராகவ தொடக்கப்பள்ளி எதிரில் புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் நாள்தோறும் குடி தண்ணீர் வெளியேறி வீணாக சாக்கடை மற்றும் சாலையில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-சரவணன், தஞ்சாவூர்.
கழிவுநீர் அகற்றப்படுமா?
தஞ்சை மகர்நோம்புசாவடி வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோவில் தெருவில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் நிரம்பி தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அந்த பகுதியில் பள்ளிக்கூடம் இருப்பதால் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளின் மீது வேகமாக வாகனங்களில் செல்வோர் சாலையில் உள்ள கழிவுநீரை அடித்து விட்டு செல்கிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் அடைப்பை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோவில் தெரு.
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல் லும் பஸ்கள் குறிப்பாக ராமநாதன் ரவுண்டானா பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லுவது இல்லை. இந்த பஸ் நிறுத்தம் அருகில் தான் குந்தவை நாச்சியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி மையம், போன்றவை உள்ளன. இதனால் மாணவ- மாணவிகள் ராமநாதன் ரவுண்டானா பஸ் நிறுத்தம் வந்து தான் பஸ் ஏறவேண்டிய நிலை உள்ளது. ஆனால் எந்த அரசு பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்பது கிடையாது. பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்ததால் மாணவிகள், பெண்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தவுடன் பஸ்சை நிறுத்தாமல் செல்கிறார்கள்.இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாணவிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள், தஞ்சாவூர்.
மயானத்தில் கொட்டகை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்ய ஊருக்கு வெளியே மயானம் உள்ளது. ஆனால் இந்த மயானத்தில் மேற்கூரை வசதி இல்லை. தற்போது மழை காலமாக உள்ளதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக மயானத்தில் மேற்கூரை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராமமக்கள், ஆர்சுத்திப்பட்டு.
Related Tags :
Next Story