ரூ.1.92 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது


ரூ.1.92 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 2:03 AM IST (Updated: 20 Nov 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் காரில் கடத்திய ரூ.1.92 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு:மங்களூருவில் காரில் கடத்திய ரூ.1.92 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் பர்கி போலீசார் நேற்று காலை அடையாறு-லால்பாக் சாலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 3 பேரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினார்கள். 

அப்போது காரில் 2 மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதுவும், ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். 

செல்லாத ரூபாய் நோட்டுகள்

இதுகுறித்து காரில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், பஜ்பே பகுதியை சேர்ந்த அப்துல் நசீர் (வயது 40), படில் பகுதியை சேர்ந்த தீபக் குமார் (32), கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜூபேர் (52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் ஜூபேரும், அப்துல் நசீரும் டிரைவராகவும், தீபக் குமார் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகவும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் இவர்கள் 3 பேரும் சித்ரதுர்கா, சிவமொக்கா பகுதிகளில் இருந்து செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்தது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மங்களூருவுக்கு கடத்தி வந்து மக்களிடம் ஏமாற்றி விற்க முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், நாங்கள் கொடுக்கும் பணத்துக்கு 50 சதவீதம் குறைவாக பணம் கொடுத்தால் போதும் என பொதுமக்களை நம்ப வைத்து மோசடி செய்ய முயன்றதும் தெரியவந்தது. 

அதாவது, இவர்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் ஒரிஜினல் பணம் கொடுக்க வேண்டும் என்று ஏமாற்ற முயன்றது தெரியவந்தது.

ரூ.1.92 கோடி மதிப்பு

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பர்கி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 92 லட்சத்து 500 மதிப்பிலான செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

காகிதம் மட்டுமே

இதனை மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி கொள்ளலாம் என மக்களை ஏமாற்றி மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுபோன்று யாரும் வங்கியில் மாற்றி கொள்ளலாம் என செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் மக்கள் வாங்க வேண்டாம். 
செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதம் மட்டுமே. வங்கியில் இதனை மாற்ற முடியாது. கைதான 3 பேருக்கும், பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விட 5 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம். அதாவது ரூ.9.50 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என்றார்.

Next Story