கடையநல்லூரில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொடூரக்கொலை


கடையநல்லூரில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொடூரக்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2021 3:17 AM IST (Updated: 20 Nov 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையநல்லூர்:


தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் வேத கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 55), பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று காலையில் கோபால் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் உள்ள வீட்டில் பெயிண்டு அடிக்கும் வேலைக்கு சென்றார். மாலையில் அங்கு கோபால் பணியில் இருந்தபோது, அங்கு வந்த வாலிபரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த 2 பேரும் சேர்ந்து திடீரென்று கோபாலை சரமாரியாக தாக்கினர். அந்த வாலிபர் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கிப் போட்டார். அந்த பெண்ணும் கம்பால் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொடூர கொலையை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோபால் 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாகவும், இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் ஆத்திரத்தில் அவரை கல்லால் தாக்கியும், கம்பால் அடித்தும் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பெண் உள்பட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கோபால் கொலை செய்யப்பட்டதை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story