நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக வருகிறது: பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒதப்பை தரைப்பாலம் மூழ்கியது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.
நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அணையின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக அணையின் அருகே ஒதப்பையில் உள்ள தரைப்பாலத்தில் மீது வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வரும் வாகனங்கள் இதே மார்க்கத்தில் வந்து செல்கின்றன. பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சிகளின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 6-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளம் தரைப்பாலத்தை ஒட்டி சென்றதால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து 7-ந்தேதி மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நேற்று மதியம் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிட்டார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜெ.மூர்த்தி, பெரிஞ்சேரி ரவி, ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் பலத்த மழைக்கு பிச்சாட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது.
ஆயினும் இங்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பலத்த மழைக்கு ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரில் இளைஞர்கள் நீச்சலடித்து, மீன்பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று வெள்ளம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் பழைய காலனியில் புகுந்ததால் 3 மின் கம்பங்கள் சேதம் அடைந்து விழுந்தன. இதில் மின்சாரம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தடைபட்டது. மின்சாரத்துறை ஊழியர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் நேற்று மாலை 5 மணிக்கு மின்சாரம் வழங்கினர்.
Related Tags :
Next Story