தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில் ராஜ் தகவல்
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரியார் விருது
சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இந்த விருதிற்கு தகுதியானவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்வார்.
விண்ணப்பிக்கலாம்
சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு செய்த பணிகளில் சாதனை செய்தவர்கள் இந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை பெற விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பத்துடன் தங்களின் சுயவிவரம, முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை இணைத்து வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story