பெரியகுளம் அருகே ஓமியோபதி டாக்டர் தற்கொலை
பெரியகுளம் அருகே ஓமியோபதி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே ஓமியோபதி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஓமியோபதி டாக்டர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் என்.ஆர்.டி. தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). ஓமியோபதி டாக்டர். இவர், அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளார். நேற்று காலை தனது மருத்துவமனைக்கு சென்ற சீனிவாசன், அங்குள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தனது கணவரின் சாவுக்கு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் தான் காரணம் என்று கூறி சீனிவாசனின் மனைவி சாந்தி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அதிகாரி மிரட்டல்
பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் லட்சுமணன், எனது கணவரின் மருத்துவமனைக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தார். அப்போது மருத்துவ ஒழுங்குமுறை சட்டத்தை மீறி மருத்துவமனை செயல்படுவதாக கூறி மிரட்டினார். இதனால் மருத்துவமனை நடத்துவதற்கான தகுதி சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ்களையும் எனது கணவர், லட்சுமணனிடம் கொடுத்தார். அப்போது அந்த சான்றிதழ்களை தூக்கி எறிந்த அவர், மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.
அப்போது எனது கணவர் பணம் தரமறுத்ததால் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்து விடுவேன் என்று மீண்டும் மிரட்டினார். இதனால் மனமுடைந்த எனது கணவர், நேற்று முன்தினம் நடந்தவற்றை என்னிடம் கூறி அழுதார். இதற்கிடையே நேற்று காலை அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே லட்சுமணன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் லட்சுமணன் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story