தேனியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
தேனியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கும், மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி, கத்தரிக்காய் செடிகள் அழுகி வருகின்றன. காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு தேனி உழவர் சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.34-க்கும், தக்காளி ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று கத்தரிக்காய், தக்காளி தலா ரூ.80 வீதம் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் மற்ற காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. தேனி உழவர் சந்தையில் நேற்றைய காய்கறி விலை (ஒரு கிலோவுக்கு) விவரம் வருமாறு:-
வெண்டைக்காய் ரூ.80, பட்டை அவரை ரூ.90, பாகற்காய் ரூ.58, பீர்க்கங்காய் ரூ.48, புடலங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.70, பூசணிக்காய் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, கருணைக்கிழங்கு ரூ.35, முட்டைகோஸ் ரூ.30, கேரட் ரூ.38, சவ்சவ் ரூ.18 என விற்பனை செய்யப்பட்டன.
Related Tags :
Next Story