கொத்தமங்கலத்தில் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை கதவுகள் வைத்து தடுத்த இளைஞர்கள்
கொத்தமங்கலத்தில் மதகுகளில் கதவுகள் இல்லாமல் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை புதிய கதவுகளை அமைத்து இளைஞர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
கீரமங்கலம்:
அம்புலி ஆற்றில் தண்ணீர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் ஏராளமான ஏரி, குளங்கள் நிரம்பி காட்டாறுகளில் தண்ணீர் செல்கிறது
அதே போல திருவரங்குளம் அருகில் உள்ள மாஞ்சன்விடுதி கிராமத்திலிருந்து ஆலங்குடி, பள்ளத்திவிடுதி, கொத்தமங்கலம், கீரமங்கலம் வழியாக வில்லுனிவயல் கிராமத்தில் வில்லுனி ஆற்றோடு இணைந்து கடலுக்கு செல்லும் அம்புலி ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. கொத்தமங்கலம் அணைக்கட்டில் தண்ணீர் அருவி போல கொட்டுவதால் ஏராளமானோர் வேடிக்கை பார்த்து தொடர்ந்து ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.
கதவுகள் இல்லாத மதகுகள்
அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து கொத்தமங்கலம் பெரிய குளம் உள்பட சேந்தன்குடி, கீரமங்கலம், நகரம் கிராமங்களுக்கிடையே உள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு தண்ணீர் கொண்டு போகும் முயற்சியாக கடந்த சில நாட்களாக இளைஞர்கள் கால்வாய்களை சீரமைத்து வருகின்றனர். அதே போல அணைக்கட்டுக்கு முன்னதாக உள்ள மாங்குளம் ஏரிக்கு அம்புலி ஆற்றிலிருந்து சென்ற தண்ணீர் மதகுகளின் கதவுகள் இல்லாததால் மீண்டும் காட்டாற்றில் செல்வதை பார்த்த கொத்தமங்கலம் இளைஞர்கள் கதவுகள் இல்லாத மதகுகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை தேக்கியதோடு தங்கள் சொந்த செலவில் தகர கதவுகளை அமைத்து தண்ணீரை தடுத்து வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், பல வருடங்களாக மதகு கதவுகள் உடைக்கப்பட்டு காணவில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தண்ணீர் வீணாகாமல் தடுக்க இளைஞர்கள் கதவு அமைத்திருக்கிறோம். தொடர்ந்து அதிகாரிகள் நிரந்தரமாக மூடித்திறக்க பலமான இரும்பு கதவு அமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story