திருமயம் அருகே பாறைக்கு வெடி வைத்து உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல்
திருமயம் அருகே பாறைக்கு வெடி வைத்து உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமயம்:
சாலை மறியல்
திருமயம் அருகே உள்ள வெள்ளிப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மலை பகுதிகள் உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பள்ளி மாணவர்கள் மீதும், ஆடு மாடு மேய்க்கும் பொதுமக்களின் மீது கல் வந்து படுகிறது.
வீடுகளுக்குள் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாறைகள் உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி நேற்று திருமயம் பொன்னமராவதி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள், அதிகாரிகள் மறியல் செய்யும் இடத்திற்கு வரவேண்டும் என கேட்டுக் கொண்டதால் இதுகுறித்து திருமயம் தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தாசில்தாரிடம், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று நேரடியாக பார்வையிட்டு அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறினார். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் ஆகியோருடன் தாசில்தார் பிரவீனா மேரி சென்று புகார் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story