வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்


வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2021 12:32 AM IST (Updated: 21 Nov 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்ேபட்டை அருேக வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை  அருேக வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் அருகே மாரியம்மன் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

அங்குள்ள புளியங்குட்டை குட்டை நிரம்பி, உபரிநீர் வெளியேறி அங்குள்ள வீடுகளை சூழ்ந்தது. ஒருசில வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீர் 2 நாட்களாக வற்றவில்லை. 

வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி அந்தக் கிராம மக்கள் பலர் திரண்டு வந்து நேற்று காலை 8.30 மணியளவில் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ரெட்டியூர் கூட்ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அரசு போக்குவரத்துக்கழக உதவி ஆய்வாளர் விஜயன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

மேலும் பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் உள்பட பலர் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கரையை உடைத்து நீர் வெளியேற்றம்

ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், சங்கர் ஆகியோரிடம் செல்போனில்  பேசி  புளியங்குட்டை குட்டையின் கரையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து, அதில் இருந்து வெளியேறும் மழைநீர் கிராமத்துக்குள் புகாமல் வேறு வழியில் திருப்பி விட வேண்டும், குட்டையில் இருந்து 
வெளியேற்றப்படும் நீரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார். 

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குட்டையின் ஒரு பகுதி கரையை உடைத்து, மழைநீர் கிராமத்துக்குள் புகாமல் வேறு வழியாக 
வெளியேற்றினர்.

இந்தச் சாலை மறியலால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story