வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கிய வெள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி


வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கிய வெள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 21 Nov 2021 12:35 AM IST (Updated: 21 Nov 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சிறிய பாலத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டதால் கிரீன் சர்க்கிள் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி சென்றன.

வேலூர்
-
வேலூரில் சிறிய பாலத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டதால் கிரீன் சர்க்கிள் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி சென்றன.

சிறிய பாலத்தில் மீண்டும் அடைப்பு

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. சில நேரங்களில் மழையின் வேகம் அதிகமாக காணப்பட்டது. மற்ற சமயங்களில் மிதமான வேகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலையோரங்களில் வெள்ளம் ஆறு போன்று பாய்ந்தோடியது.

வேலூர் முத்துமண்டபம், புதிய பைபாஸ்சாலை, காட்பாடி சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேண்பாக்கத்தில் ஒருபகுதியில் இருந்து வந்த மழைநீர் கிரீன்சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கியது.

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறியபாலத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டது. அதனால் குறைவான தண்ணீரே அந்த வழியாக சென்றது. அதனால் கிரீன்சர்க்கிள் பகுதியில் 2 அடிக்கும் மேலாக மழைவெள்ளம் தேங்கி காணப்பட்டது. அதனால் வேலூரில் இருந்து காட்பாடி, சித்தூர் நோக்கி சென்ற இருசக்கரவாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி மெதுவாக சென்றன.

குளம்போல் தேங்கிய வெள்ளம்

"வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடனே அந்த பகுதியை கடந்து சென்றனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சிறியபாலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து தண்ணீரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கடந்த 15-ந் தேதி கிரீன்சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதன்பின்னரும் மாநகராட்சி அதிகாரிகள் கிரீன் சர்க்கிள் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினார்கள்.
=========

Next Story