6 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு
அரியலூர் மாவட்டத்தில் 6 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
அரியலூர்:
கூடுதல் மழைப்பொழிவு
அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் 6 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் 613.38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவை காட்டிலும் கூடுதலாக 22 சதவீதமாக கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தற்போது வரை 1,336.84 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் 2,477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
உடையார்பாளையம் தாலுகாவில் சுத்தமல்லி, பொன்னேரி அணைக்கட்டுகள் உள்ளன. மழை காரணமாக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் 2 நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறந்து விடப்பட்டது. வாரணவாசியில் ஓடும் மருதையாறில் முழுமையாக நீர் செல்கிறது. திருமானூரில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் இருகரையை தொட்டபடி செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் முழுமையாக நீர் செல்வதால் பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
987 வீடுகள் சேதம்
மேலும், 226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் தற்போது 211.05 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போது வினாடிக்கு 256 கன அடி நீர் நீர்த்தேக்கத்திற்கு வருகிறது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போது வரை 94.50 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது சித்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரியில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளின் அருகே யாரும் செல்ல வேண்டாம். தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்தில் 987 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 655 குடிசை வீடுகள் பகுதியாகவும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும், 300 ஓடு மற்றும் இதர வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடு ேசதமடைந்ததற்கு நிவாரணமாக இதுவரை 184 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 56 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பயிர்கள் சேதம்
மேலும் மழையின் காரணமாக உயிரிழந்த 9 கால்நடைகளுக்கு ரூ.80 ஆயிரமும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் நிவாரணமாகவும் என மொத்தம் 645 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 90 ஆயிரத்து 300 நிவாரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 342 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 217.55 எக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 56.68 எக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு பயிர்களும், 14.24 எக்டேர் பரப்பளவில் பருப்பு வகை பயிர்களும், 1,588.18 எக்டோர் பரப்பளவில் பருத்தி பயிரும் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 524 எக்டேர் நெற்பயிரும், 80 எக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 301 எக்டேர் பருப்பு வகை பயிர்களும், 6 எக்டேர் கரும்பு பயிர்களும், 7.40 எக்டேர் எண்ணெய்வித்து பயிர்களும், 4003 எக்டேர் பருத்தி பயிர்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வயல்களில் நீர் தேங்காமல் தடுக்க...
தற்போது மேட்டூருக்கு அதிக அளவில் உபரிநீர் வருவதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு திருச்சி அருகே உள்ள முக்கொம்பில் இருந்து உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் 50 ஆயிரம் கனஅடி அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கலந்து விடுகிறது.
பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான கரைவெட்டி ஏரி, வேட்டக்குடி ஏரி, மானேரி, பளிங்காநத்தம் ஏரி, சுக்கிரன் ஏரி அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. அனைத்து ஏரிகளிலும் கரை காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் நீர் வயல்களில் தேங்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாதத்தோடு மழையின் தாக்கம் குறைந்தால் இந்த வருடம் கரும்பு, நெல் மற்றும் மற்ற பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்றும், யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை சரி செய்து கொடுத்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story