குடகு-மதுரை இடையே மீண்டும் கர்நாடக அரசு பஸ் இயக்கம்
குடகு-மதுரை இடையே மீண்டும் கர்நாடக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடகு: குடகு-மதுரை இடையே மீண்டும் கர்நாடக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல்
நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் ரெயில், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதுடன் பஸ், ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல், கர்நாடக மாநிலம் குடகில் இருந்து தமிழ்நாடு மதுரைக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்தும் அந்த பஸ் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், குடகு-மதுரை இடையே மீண்டும் கர்நாடக அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று குடகில் வசிக்கும் தமிழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கர்நாடக அரசு பஸ் மீண்டும் இயக்கம்
இந்த நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி. குடகு-மதுரை இடையே கர்நாடக அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குடகு-மதுரை கர்நாடக அரசு மீண்டும் இயக்க தொடங்கி உள்ளது. அந்த பஸ் தினமும் மாலை 6.15 மணிக்கு குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புராவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கமாக இந்த பஸ் தினமும் மாலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு குடகை வந்தடையும். இந்த பஸ் இருமார்க்கமாகவும், பாலிபெட்டா, கோணிகொப்பா, மைசூரு, சாம்ராஜ்நகர், சத்தியமங்கலம், திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல் வழியாக செல்கிறது.
தமிழ் மக்கள் மகிழ்ச்சி
குடகு-மதுரை இடையே கர்நாடக அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுவதால் தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து குடகில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், குடகில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் வசிக்கிறார்கள். இங்கிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த பஸ், எங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது.
தற்போது குடகு-மதுரை இடையே மீண்டும் பஸ் இயக்கப்பட்டு உள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story