தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது-பொதுமக்கள் அவதி


தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது-பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Nov 2021 2:32 AM IST (Updated: 21 Nov 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம்:
தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஏரி நிரம்பி வெள்ளம்
சேலம் அருகே சிவதாபுரம் பகுதியில் சேலத்தாம்பட்டி ஏரி உள்ளது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த ஏரியானது மழைக்காலங்களில் அடிக்கடி நிரம்பி அதன் உபரிநீர் சிவதாபுரம், பனங்காடு பகுதியில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து விடுகிறது. சில இடங்களில் வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துவிடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறி சித்தர்கோவில் செல்லும் மெயின்ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆட்கள் செல்ல முடியாத அளவுக்கு முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. சிவதாபுரம், பனங்காடு பகுதியில் உள்ள வீடுகள், வெள்ளி கொலுசு பட்டறைகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் தண்ணீரில் செல்ல முடியாமல் சிரமப்படுவதை காணமுடிகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சிவதாபுரம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு நடக்கும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மன் நகரில் வெள்ளிப்பட்டறைக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை வாசல் முன்பு அடுக்கி வைத்துள்ளனர். இதனிடையே தொடர் மழையால் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் விளையாட்டு மைதானம் குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த நீரை வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வடியாமல் நிற்கும் மழைநீர்
சேலம் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள புதிய அம்பேத்கர் நகரில் சமீபத்தில் பெய்த மழையால் வீடுகள் முன்பு கடந்த 10 நாட்களாக தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த மழைநீரால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே தெருவில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story