நெல் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்


நெல் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்
x
தினத்தந்தி 21 Nov 2021 5:53 PM IST (Updated: 21 Nov 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அடுத்த அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகிறது.

தளி, 
உடுமலை அடுத்த அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகிறது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நெல்சாகுபடி
உடுமலை அடுத்த அமராவதிஅணையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தென்னை, வாழை, கரும்பு காய்கறிகள் உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்பட்டாலும் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது. மழைக்காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை கொண்டு கல்லாபுரம் - ராமகுளம் வாய்க்கால், அமராவதிஆறு, பிரதானகால்வாய் மூலமாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதைக்கொண்டு நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.மழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெற் பயிர்களில் குலை நோய் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது.
காட்டுப்பன்றிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது.இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தவுடன் அதில் கதிர்கள் பிடித்து பழுக்கும் தருவாய்க்கு வந்தது.
அதற்குள்ளாக அமராவதி, கல்லாபுரம் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.இதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் குலை மற்றும் பழநோய் தாக்கி வந்தது.இதனால் ஒரு ஏக்கரில் பாதி அளவுக்கு சேதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
பல்வேறு இடர்பாடுகளை கடந்து பயிர்களை அறுவடை நிலைக்குக் கொண்டு வந்த விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது போன்ற காரணங்களால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலும் முதலீடாக செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி, கல்லாபுரம் பகுதியில் ஆய்வு செய்து காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story