கடை, வீட்டை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர், பந்தலூரில் கடை, வீட்டை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் பயந்து ஓடிய பெண் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
கூடலூர்
கூடலூர், பந்தலூரில் கடை, வீட்டை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் பயந்து ஓடிய பெண் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே 3 டிவிசன் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
அதன்பின்னர் மூலவயல் கிராமத்துக்குள் நுழைந்த காட்டுயானைகள் வீடுகளை முற்றுகையிட்டன. மேலும் தொழிலாளி முகமது அலி என்பவரது வீட்டின் முன்பக்க சுவரை உடைத்து தள்ளின. பின்னர் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றன. முன்னதாக வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.
படுகாயம்
இதேபோன்று கர்க்கபாலி பகுதியில் மற்றொரு காட்டுயானை நுழைந்தது. பின்னர் மரைக்காயர் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது. இதை கண்டு பயந்த மரைக்காயரின் மனைவி கதீஜா(வயது 55) வெளியே தப்பி ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாருக்குள் நேற்று முன்தினம் இரவில் காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து செய்தலவி என்பவரது பழக்கடையின் இரும்பு கதவை உடைத்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து பழங்களை ருசித்துவிட்டு சென்றது.
பேச்சுவார்த்தை
இதை நேற்று அதிகாலையில் கண்ட வியாபாரிகள் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். உடனே சேரம்பாடி வனச்சரகர்ஆனந்தகுமார், வனவர் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்தால் கண்டறிய முன்எச்சரிக்கை அலாரங்கள் பொருத்தப்படும். இரவு நேரங்களில் கண்காணிப்பு பணி நடைபெறும். சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று காலை 9 மணியளவில் அந்த பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story