வருசநாடு பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை


வருசநாடு பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Nov 2021 10:18 PM IST (Updated: 21 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு பகுதியில் 2 ஆயிரம் இலவம் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தேனி : 

கடமலை-மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்தரைப்புலி, வட்டகானல், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வருசநாடு மற்றும் கண்டமனூர் வனத்துறையினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவம் மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வருசநாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள், நேற்று முன்தினம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைதுறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். 

அதன்படி நேற்று காலை மேகமலை உதவி வன பாதுகாவலர் ரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியன், வனவரி திட்ட அலுவலர் மணிமாறன், கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ராஜபிரியதர்ஷன், அன்பழகன், வருசநாடு வனச்சரகர் ஆறுமுகம், வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் வருசநாடு பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் வருசநாடு அருகே காந்திகிராமம் வழியாக ஜீப்பில் சென்றனர். அப்போது விவசாயிகள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் பதில் எதுவும் கூறாமல் புறப்பட்டு சென்றனர். 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, தற்போது இலவம் மரங்களை வெட்டி அழித்ததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற ஆய்வில் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மரங்களை வெட்டி அழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் கூட்டங்கள் நடத்தி அதன் பின்பு வனத்துறையினரை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். இதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story