வெள்ளத்தால் ஆற்றில் அடித்து வரப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
வெள்ளத்தால் ஆற்றில் அடித்து வரப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
கடலூர்,
கடலூர் கெடிலம் ஆற்றிலும், தென்பெண்ணையாற்றிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் தென்பெண்ணையாற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடியதில், செடி, கொடிகள் மற்றும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களை அடித்துச் சென்று இறுதியில் கடலூர் தாழங்குடா கடலில் கலந்தது.
மேலும் தென்பெண்ணையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் உப்பனாறு வழியாகவும் வெள்ள நீர் தேவனாம்பட்டினம் கடலில் கலந்தது. இதேபோல் கெடிலம் ஆற்று வெள்ளமும், உப்பனாற்றுடன் சேர்ந்து தேவனாம்பட்டினத்தில் கலந்து வருகிறது.
இவ்வாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி-கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என்று அனைத்தும் கடல் அலையில் அடித்து வரப்பட்டு, கடற்கரையில் குவிந்து கிடக்கிறது.
அதாவது கடலூர் தாழங்குடாவில் இருந்து சில்வர் பீச் வரை செடி-கொடிகள் கடற்கரையோரம் குவிந்து கிடக்கிறது.
மணல்பரப்புகளாக காட்சி தந்த கடற்கரை குப்பை கூடமாக காட்சி அளிக்கிறது.
தற்போது அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கடற்கரையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story