முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 10:40 PM IST (Updated: 21 Nov 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

தேனி: 

தமிழக -கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழையால் கடந்த 18-ந்தேதி அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்துக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த நீர் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப் பெரியார் வழியாக இடுக்கி அணைக்கு சென்றது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.  முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 141.10 அடி. நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 104 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 250 கனஅடி வீதமும், கேரளாவுக்கு வினாடிக்கு 649 கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 468 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால், கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 218 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

Next Story