திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளரை பிடிக்க போலீசார் தீவிரம்


திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளரை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 21 Nov 2021 11:31 PM IST (Updated: 21 Nov 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. 
இதன் தாளாளர் ஜோதி முருகன், கல்லூரிகளில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதியின் வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் தாடிக்கொம்பு போலீசில் மாணவிகள் புகார் செய்தனர். 
அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கல்லூரியின் விடுதி வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது. 
தனிப்படை தேடுதல்
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த ஜோதிமுருகன் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வருகின்றனர்.
ரகசிய விசாரணை
இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். இதனால் அவர் மூலம் ஜோதிமுருகன் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அவர், ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஜோதிமுருகன் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story