கரூர் மாவட்டத்தில் 10-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்


கரூர்
x
கரூர்

கரூர் மாவட்டத்தில் 10-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கரூர்
கொரோனா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டம் முழுவதும் 512 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 10-ம் கட்ட முகாம்கள் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புன்னம் சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட  இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சிலர் தங்களுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய் இருப்பதாகவும், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சில அச்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். கலெக்டர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள சந்தேகங்களுக்கும் தானும் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் விடையளித்து, அவர்களின் அச்சத்தைப்போக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்தார்.
வீடுகளை தேடி.... 
தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்களும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் சமூக விலகலை உறுதிசெய்தல், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் குழந்தைகள் நல மைய பணியாளர்களும், சுயஉதவிக்குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் அந்தந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
கலெக்டர் உத்தரவையடுத்து, தடுப்பூசி போடும் முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் வராத இடங்கள், முகாமிற்கு வருகை தர இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை தேடி தடுப்பூசி செலுத்தும் குழுவினரே நேரில் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 12 ஆயிரத்து 776 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 28 ஆயிரத்து 472 பேருக்கும் என மொத்தம் 41 ஆயிரத்து 248 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story