சுத்தமல்லி அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு;3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
சுத்தமல்லி அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்தது.
தா.பழூர்,
சுத்தமல்லி அணை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி அணை தனது முழு கொள்ளளவான 226.8 மில்லியன் கன அடியை எட்டி இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது உபரி நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கன மழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு தண்ணீர் திரண்டு வந்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வர தொடங்கியது.
வயல்களில் தண்ணீர் புகுந்தது
இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் அணைக்குடி மதகுக்கு தண்ணீர் செல்லும் நீர்வடி பாதையின் கரைகள் உடைந்தன. இதனால் நீர்வழி பாதையை ஒட்டியுள்ள வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
விவசாயிகள் பொழுது விடிந்து பார்த்தபோது அருள்மொழி, ஆனைகுடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நடவு செய்யப்பட்டிருந்த நெல்வயல்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளித்தன.
போக்குவரத்து நிறுத்தம்
காரைக்குறிச்சி-ஸ்ரீபுரந்தான் இடையேயான நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகளை கடந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், வெள்ள அபாயம் உள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜெயங்கொண்டத்தில் இருந்து முத்துவாஞ்சேரி வரை செல்லும் நகர பஸ் அருள்மொழி கிராமத்தோடு திருப்பி அனுப்பப்பட்டது. இதேபோல் அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி வழியாக கும்பகோணம் செல்லும் பஸ் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் திருப்பி விடப்பட்டன. கும்பகோணத்திலிருந்து அரியலூர் செல்லும் பஸ் அருள்மொழி கிராமத்தோடு திருப்பி அனுப்பப்பட்டது.
கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அருள்மொழி ஆகிய கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் ஆகியோர் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதேபோல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உலகநாதன், கவிதா விஜயகுமார் ஆகியோர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
சுத்தமல்லி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு மதியம் 12 மணியளவில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மதியத்திற்கு மேல் சிறிது சிறிதாக சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த வெள்ள நீரின் அளவும் குறைந்தது.
ஆனாலும் மிக வேகமாக காட்டாற்று வெள்ளமாக ஓடிவந்த வெள்ள நீரில் வயல்களில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் உருக்குலைந்து போயின. எனவே வெள்ளம் பாதித்த பகுதிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story