வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி


வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
x

வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளம் நிரம்பியது

நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களில் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் மிகப்பெரிய குளம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை வடக்கு விஜயநாராயணம் பகுதியில் இதுவரைக்கும் குறைவாக பெய்து உள்ளது. இருந்தபோதிலும் நம்பியாறு பகுதியில் பெய்த பலத்த மழையால், நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த ஆற்றில் இருந்து விஜயங்காலில் அதிக அளவு தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்றது. மேற்கே ஐ.என்.எஸ். கடற்படை தளம் முதல் கிழக்கே குட்டத்தட்டி பாறை வரை குளம் பரந்து விரிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளத்தில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீர் பட்டஞ்சேரி குளத்திற்கு செல்கிறது. பட்டஞ்சேரி குளம் ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அங்கிருந்து விஜயஅச்சம்பாடு குளத்திற்கு தற்போது தண்ணீர் செல்கிறது. 
போதிய மழை பெய்யாத சூழ்நிலையிலும் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பியதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் நெல் நடுவை மற்றும் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதலாளி குளம்

இதேபோல் திசையன்விளை தாலுகா பகுதியில் சரியாக மழை பெய்யாததால் இப்பகுதியில் உள்ள குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு புல் தரையாக காட்சியளித்தது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக நம்பியாற்று அணை முழுவதும் நிரம்பியது.
இதையடுத்து அணையின் இடது புறகால்வாய் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திசையன்விளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திசையன்விளை முதலாளி குளத்திற்கு தண்ணீர் வந்தது. நேற்று குளம் முழுவதும் நிரம்பி, தண்ணீர் மறுகால் பாய்ந்து குருவி சுட்டான்குளத்திற்கு சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story