கர்நாடகத்தில் 193 தாலுகாக்களில் 4 மடங்கு அதிக மழை


கர்நாடகத்தில் 193 தாலுகாக்களில் 4 மடங்கு அதிக மழை
x
தினத்தந்தி 22 Nov 2021 1:54 AM IST (Updated: 22 Nov 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 193 தாலுகாக்களில் 4 மடங்கு அதிக மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தொடர் மழை

  வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீாத்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், கோலார், தாவணகெரே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

  எல்லாவற்றுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

193 தாலுகாக்களில் அதிக மழை

  இந்த நிலையில், கர்நாடகத்தில் கடந்த 12-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 193 தாலுகாக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த 193 தாலுகாக்களிலும் வழக்கத்தை விட 4 மடங்குக்கு அதிகஅளவு மழை பெய்திருப்பதாகவும், பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக கர்நாடகத்தில் நவம்பர் மாதத்தில் 1.1 சென்டி மீட்டருக்கு அளவுக்கு தான் மழை பெய்யும்.

  ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 5.6 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வழக்கத்தை விட 397 சதவீதம் அதிகமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தாலும் பீதர் மாவட்டத்தில் மட்டும் வழக்கத்தை விட குறைவான அளவே மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.

Next Story