மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் சாவு
பறக்கை அருகே மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பறக்கை அருகே மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.
மாணவன்
பறக்கை அருகே உள்ள வண்டிகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜகுமார், கொத்தனார். இவருடைய 3-வது மகன் ஹரிஹரன் (வயது 14). ஹரிஹரன் வல்லன்குமாரன்விளையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை ராஜகுமாரின் வீட்டின் முன்பு உள்ள டியூப்லைட் எரியாமல் இருந்துள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் ஹரிஹரன் ஈடுபட்டார்.
மின்சாரம் தாக்கியது
அப்போது, எதிர்பாராத விதமாக ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அலறியபடி ஹரிஹரன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த ராஜகுமார், தாயார் சித்ரா ஆகியோர் மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு மாணவனின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர், இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவன் ஹரிஹரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story