சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் 10-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம்-சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


சேலம்  மாவட்டத்தில் 1,392 மையங்களில் 10-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம்-சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2021 3:19 AM IST (Updated: 22 Nov 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் நேற்று 10-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. சேலத்தில் நடந்த முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் நேற்று 10-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. சேலத்தில் நடந்த முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 28 ஆயிரத்து 717 பேருக்கு முதல் தவணையும், 9 லட்சத்து 27 ஆயிரத்து 297 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் இந்த மாதத்திற்குள் போடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
10-வது கட்ட முகாம்
மாவட்டம் முழுவதும் உள்ள 1,392 மையங்களில் நேற்று 10-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. தடுப்பூசி செலுத்துபவர்கள், கணினியில் பதிவு செய்பவர்கள், தடுப்பூசி போடாதவர்களை அழைத்து வருபவர்கள் உள்ளிட்ட பணிகளில் 18 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று நடந்த மெகா முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சில மையங்கள் தடுப்பூசி போட ஆட்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டன.
2 தவணை கட்டாயம்
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 69 ஆயிரத்து 577 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவும், தகுதியுள்ள 3 லட்சத்து 82 ஆயிரத்து 284 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான முழுமையான எதிர்ப்பாற்றல் கிடைக்கும் என்பதால் 2 தவணை தடுப்புசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம் நேற்று 205 மையங்களில் நடந்தது. அஸ்தம்பட்டி மண்டலம ்13-வது வார்டு குளூனி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட களப்பணியாளர்களை அறிவுறுத்தினார்.
மாநகராட்சி பகுதியில் இதுவரை 4 லட்சத்து 99 ஆயிரத்து 109 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து 73 ஆயிரத்து 797 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் யோகானந்த் உடனிருந்தார். நேற்று நடந்த முகாமில் மாநகராட்சி பகுதியில் 15 ஆயிரத்து 517 பேருக்கும், மாவட்ட பகுதியில் 34 ஆயிரத்து 964 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 31 ஆயிரத்து 943 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story