ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 22 Nov 2021 11:19 AM IST (Updated: 22 Nov 2021 11:19 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கனமழை
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் ஐந்தருவியை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர் வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஐந்தருவி வெளியே தெரியாத அளவில் அதனை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
தீவிர ரோந்து
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளான ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர். 
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார், ஊர்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினரும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

Next Story