காட்பாடி பகுதியில் மழை விட்டும் வெள்ளம் வடியாத அவலம்
காட்பாடி பகுதியில் தொடர் மழை விட்டும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வடியாமல் சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
காட்பாடி
காட்பாடி பகுதியில் தொடர் மழை விட்டும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வடியாமல் சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
குளம் போல் தேங்கிய மழைநீர்
காட்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் காய்ந்தது. மழை பெய்யவில்லை. இருந்தாலும் பல பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
பாலாஜி நகர், மதிநகர், அருப்பு மேடு, பாரதிநகர், வி.ஜி.ராவ் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் சாலைகளில் குளம் போல் தேங்கி உள்ளது.
பாரதிநகர், அருப்புமேடு, ஸ்டேட் பாங்க் காலனி ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயே மழைநீர் புகுந்ததால் இரண்டு அடிக்கு மேல் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த பொருட்கள் சேதமானது. மேலும் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்குக்கூட வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது.
நோய் தொற்று ஏற்படும் அபாயம்
தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்பதால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும். மேலும் சாலைகளின் இருபுறமும் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும்.
ஓடை பிள்ளையார் கோவில் அருகிலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரை மழைநீர் சாலையில் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் காட்பாடியிலிருந்து வேலூருக்கு செல்லும் வாகனங்களும், வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. மேலும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Related Tags :
Next Story