தேன்கனிக்கோட்டை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தேன்கனிக்கோட்டை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Nov 2021 12:39 PM IST (Updated: 22 Nov 2021 12:39 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிரபல ரவுடி 
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தக்கட்டியை சேர்ந்தவர் நரசப்பா. இவரது மகன் சுரேஷ் என்கிற கெம்பன் (வயது 33). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. தேன்கனிக்கோட்டை உட்கோட்ட ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் உள்ளது. இவரும், மாரசந்திரத்தை சேர்ந்த மகேஷ்குமார் என்கிற மகேஷ் (34) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். அவர் மீதும் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் இடையே சமீப காலமாக பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மாரசந்திரம் கிராமத்தில் சீட்டு ஏலம் நடந்தது. அப்போது சுரேஷ் - மகேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. 
வெட்டிக்கொலை 
இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜ்குமார் (31), லோகேஷ், பிரவீன், கெஞ்சா மற்றும் சிலர் சுரேசை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டினார்கள். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து மோட்டார்சைக்கிள்களில் சென்று விட்டனர்.
இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு ெபாதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். 
வலைவீச்சு 
தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சுரேசின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷ், ராஜ்குமார், லோகேஷ், பிரவீன், கெஞ்சா உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
இந்த கொலை காரணமாக மாரசந்திரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story