பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
ஆந்திர மாநிலத்தில் கனமழையால் தமிழக எல்லையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக அம்மபள்ளி அணையில் இருந்து நகரி ஆறு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழைநீர் ஆகியவை இணைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 22 ஆயிரத்து 444 கனஅடியாக குறைந்தது.
இதன் காரணமாக பூண்டி ஏரியிலிருந்து 23 ஆயிரத்து 728 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடி. தற்போது 34.26 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று இரவு பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அது அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
இதேபோல் சோழவரம் ஏரியில் இருந்து 415 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 398 கனஅடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 216 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 399 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. 13 ஆயிரத்து 222 மில்லியன் கொள்ளளவு (13.22 டி.எம்.சி.) கொண்ட குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 10 ஆயிரத்து 823 மில்லியன் கனஅடி (10.82 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. இதனால் சென்னை மாநகருக்கு வழக்கத்தை விட கூடுதலாக 989 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story