26ந் தேதி ஒரு நாள் முழு அடைப்பு
திருப்பூரில் 26ந் தேதி ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம்
திருப்பூர்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் 26ந் தேதி ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
நூல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த கோரியும், தொழில் சிக்கல் மற்றும் நெருக்கடிகளை தீர்க்க மாநில அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டல் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம்
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, டீமா, டெக்பா, பவர் டேபிள், பிரின்டிங் பட்டறை, ரைசிங், காஜா பட்டன், செக்கிங் உள்ளிட்ட பின்னலாடை தொழில்துறையினர், அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல். பி. எப்., வணிகர் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்பட 117 அமைப்புகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு
நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.
இந்திய பருத்தி கழகம் இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்களை தவிர்த்து நேரடியாக நூற்பாலைகளுக்கு மூலப் பொருள்களை வழங்க வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம் அமைக்கப்பட வேண்டும்.
26ந் தேதி முழுஅடைப்பு
பின்னலாடை தொழில் துறைக்கு என தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அரசு நூல் விலையை கட்டுப்படுத்த கோரி முதல் கட்டமாக திருப்பூரில் வருகிற 26ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டீமா தலைவர் முத்து ரத்தினம் கூறும்போது, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை நூல் விலை கிலோவுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை செய்ய முடியாமல் தொழிலை விட்டு வெளியேறும் நிலை அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் பின்னலாடை தொழில் 12 லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது. எங்கள் பாதிப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவித்துள்ளோம். 26ந் தேதி ஒருநாள் திருப்பூர் முழுவதும் முழுகடையடைப்பு, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் நடக்கிறது. 117 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதால் பின்னாலாடை துறையில் ரூ.2 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.
Related Tags :
Next Story