தர்ணா


தர்ணா
x
தினத்தந்தி 22 Nov 2021 11:44 AM GMT (Updated: 22 Nov 2021 11:44 AM GMT)

பெருந்தொழுவு அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் திடீர் தர்ணா

திருப்பூர், நவ
பெருந்தொழுவு அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிலம் முருகேஸ்வரி மனுக்களை பெற்றார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் தனியார் மருத்துவமனை, ஸ்கேன் சென்டர், வங்கி ஆகியவை அருகே புதிதாக டாஸ்மக் கடை பார் வசதியுடன் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரெயில் நிலையம், காலேஜ் ரோடு, அவினாசி ரோடு, பெருமாநல்லூர் ரோடு மற்றும் திருப்பூர் வடக்கு, தெற்கு பகுதியை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. பத்திரகாளியம்மன் கோவிலும் அருகில் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அங்கு அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பொதுவழித்தடம் ஆக்கிரமிப்பு
பொங்கலூர் ஒன்றியம் தேவனம்பாளையம் சின்னகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதியில்லை. மழைக்காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. வடிகால் வசதி இல்லை. சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஊத்துக்குளி மொரட்டுப்பாளையம் செம்பாவள்ளம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பொதுவழித்தடத்தை தனியார்கள் சிலர் கட்டிடம் கட்டி ஆக்கிரமித்து விட்டனர். இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தர்ணா
செங்கப்பள்ளி கஸ்தூரிபாளையத்தை சேர்ந்த பூவாத்தாள் , தங்கை மாரத்தாள் மற்றும் உறவினர்கள் அளித்த மனுவில், நாங்கள் 4 சகோதரிகள். எங்களுக்கு சொந்தமான நிலம் வீரபாண்டி கிராமத்தில் 2.76 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை எங்களின் உறவினர் போலியாக ஆவணங்கள் தயாரித்து எங்களை ஏமாற்றி வேறொருவருக்கு விற்று விட்டார். எனவே எங்கள் இடத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் அருகே பெருந்தொழுவு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன்பு ரோட்டில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு வாங்க தொடர்ந்து போராடி வருகிறோம். 6 மாதங்களுக்கு முன்பு மின் இணைப்புக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. சொந்த இடத்தில் மின்கம்பம் அமைப்பதாக சிலர் கூறியதால் மின்கம்பம் நடும் பணி கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் மாற்றுவழியில் 10 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. தனி மனிதர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் இணைப்பு தர முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story