குண்டும், குழியுமான சாலையால் வாகன போக்குவரத்து பாதிப்பு
குண்டும், குழியுமான சாலையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோத்தகிரி
குண்டும், குழியுமான சாலையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழங்குடியின கிராமம்
கோத்தகிரியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் நட்டக்கல் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு இருளர் இன மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைக்காக கீழ்கோத்தகிரி, கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
இந்த நிலையில் கீழ்கோத்தகிரியில் இருந்து நட்டக்கல் பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த சாலையில் அரசு பஸ் மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் கூட இயக்கப்படுவது இல்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத நிலை உள்ளது.
மேலும் அவர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, அங்கிருந்து பஸ் ஏறி வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உடனடியாக சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஆனால் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாத வகையில் சாலை உள்ளதால், அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வது தடைபட்டு உள்ளது.
எனவே சாலையை உடனடியாக சீரமைத்து எங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வி தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story