பால் கொள்முதல் செய்ததில் ரூ.50 லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம், விவசாயிகள் மனு


பால் கொள்முதல் செய்ததில் ரூ.50 லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 22 Nov 2021 8:24 PM IST (Updated: 22 Nov 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

பால் கொள்முதல் செய்த வகையில் ரூ.50 லட்சம் தராமல் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையடுத்து காலையில் இருந்தே பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். இந்த நிலையில் நிலக்கோட்டை, கன்னிவாடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 25-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நிலக்கோட்டை, கன்னிவாடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து தனியார் பால் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பால் கொள்முதல் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக அவர்கள் பால் கொள்முதல் செய்த வகையில் ரூ.50 லட்சம் வரை எங்களுக்கு பணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தது. இதுகுறித்து அந்த நிறுவன நிர்வாகிகளிடம் கேட்ட போது, பணத்தை கொடுக்காமல் எங்களை மோசடி செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே அந்த நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்ய வேண்டும்
அதன் பின்னர் கொடைக்கானலை அடுத்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான கைப்பண மண்ணாடியின் மகள் காந்தியம்மாள் மற்றும் குடும்பத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் தந்தைக்கு அரசு சார்பில் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் எங்களை ஏமாற்றி அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டனர். எனவே அவர்களிடம் இருந்து எங்கள் நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முருகேஷ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு கல்லூரிக்கு மாற்றுவதுடன் அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிவாரணம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வடமதுரை ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கண்வலி கிழங்குகள் மழையால் அழுகி நாசமாகிவிட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரையை அடுத்த கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கொடுத்த மனுவில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களை வாக்காளர்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 320 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story