பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2¼ கோடி வருவாய் இன்றும் எண்ணும் பணி நடக்கிறது
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2¼ கோடி வருவாயாக கிடைத்தது.
பழனி:
உண்டியல் காணிக்கை
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதைத்தொடர்ந்து 2 மாதங்களாக காணிக்கை எண்ணும் பணி நடைபெறவில்லை. இதற்கிடையே கோவிலில் சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய விழாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றன. இதையடுத்து கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
ரூ.2 கோடியே 36 லட்சம்
கோவிலின் கார்த்திகை மண்டபத்தில் நடந்த காணிக்கை எண்ணும் பணிக்கு, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் செயல்அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 150 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,453 கிராம், வெள்ளி 15 கிலோ (14,995 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
ஆனால் காணிக்கை எண்ணும் பணி நேற்று நிறைவடையாததால் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story