சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்


சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 22 Nov 2021 9:05 PM IST (Updated: 22 Nov 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் மேம்பாலம் துண்டிக்கப்பட்டதால் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 15 மணி நேரம் போக்குவரத்துது பாதிப்பு ஏற்பட்டது.

மேம்பாலம் துண்டிப்பு

ஆந்திர மாநிலத்தின் முக்கிய ஆறான பென்னாற்றில் ஏற்பட்ட அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோவூரில் உள்ள மேம்பாலம் நேற்று முன்தினம் உடைந்தது. இதனால் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் விஜயவாடாவிற்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தமிழக-ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ஆந்திர மாநில போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தி வைத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி, திருப்பதி, சூளுர்பேட்டை, நெல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்தில் நேற்று பாதிப்பு எற்பட்டது.

ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் சரக்கு லாரிகளும் தொடர்ந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல மணி நேரமாக நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் லாரி டிரைவர்கள் உணவு மற்றும் அடிப்படை தேவைகள் ஏதுமின்றி கடுமையான சிரமத்திற்கு ஆளானார்கள்.

15 மணி நேர காத்திருப்பு

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் துண்டிக்கப்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றதால் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஆந்திர மாநில போலீசார் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். சுமார் 15 மணி நேர காத்திருப்புக்கு பிறகு கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் எளாவூர் சோதனைச்சாவடி பகுதியில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டு சென்றன.


Next Story