சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய வீடுகளை விற்ற பயனாளிகள்


சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய வீடுகளை விற்ற பயனாளிகள்
x
தினத்தந்தி 22 Nov 2021 9:57 PM IST (Updated: 22 Nov 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய வீடுகளை சில பயனாளிகள் விற்றுள்ளனர். 20 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் 2010-11-ம் ஆண்டில் அரசு சார்பில் 100 வீடுகள் கட்டப்பட்டன. இதனை தொடர்ந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு அவர்களிடம் வீடு ஒப்படைக்கப்பட்டது. 
இந்த நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சிலர் விற்றுள்ளதாகவும், சிலர் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

அதிகாரிகள் ஆய்வு 

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்(தணிக்கை) மாதேஸ்வரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரமேஷ், அந்தோணியம்மாள், தேவி, ஆரோக்கியமேரி, என்ஜினீயர் சாமிதுரை ஆகியோர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது அவர்கள், அரசின் பயனாளி பட்டியலில் உள்ளவர்கள் தான் வீடுகளில் குடியிருக்கிறார்களா?, அல்லது வேறு யாரேனும் குடியிருக்கிறார்களா? என்று ஆதார் கார்டை வாங்கி சரி பார்த்தனர். 

விற்பனை-வாடகை 

இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதும், சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story