3 குடும்பத்தினர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் 3 குடும்பத்தினர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
பெண் தீக்குளிக்க முயற்சி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது அம்மச்சியாபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரன் மனைவி மாரியம்மாள் (வயது 26) என்பவர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் அங்கு வந்தார். அவர் தனது கையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்தார். நுழைவு வாயிலில் நின்று கொண்டு தனது உடலிலும், குழந்தை உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தினர்.
போலீசாரிடம் மாரியம்மாள் கூறும்போது, ‘எனது கணவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். அவர் என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவரை விசாரணைக்காக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
கூலித்தொழிலாளி
அந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சக்கம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பெரியகருப்பன் (46) என்பவர் தனது மனைவி சுமதி, மகன் கதிரவன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டரின் கார் நிறுத்தும் இடம் அருகில் சென்ற பெரியகருப்பன், மறைத்து எடுத்து வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர், ‘எனது பூர்வீக நிலத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தவறான பட்டா வழங்கப்பட்டது. பின்னர் அந்த பட்டா ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், எனக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் கட்டி வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
தாய்-மகன்
இந்நிலையில், மதுரை ஆணையூரை சேர்ந்த ராமுத்தாய் (72), அவருடைய மகன் ஜனகராமன் ஆகிய 2 பேரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது அதில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில், அவர்களுக்கு சொந்தமான தோட்டம் ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான்கோம்பை பகுதியில் உள்ளதாகவும், அதை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தர மறுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களையும் விசாரணைக்காக தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அடுத்தடுத்து நடந்த 3 தீக்குளிக்க முயன்ற சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பெரியகருப்பன் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மற்ற அனைவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story