புதுக்கோட்டை அருகே, சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை சம்பவம்: பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
புதுக்கோட்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 50). இவரும், ஏட்டு சித்திரைவேலும் கடந்த 20-ந்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பூலான்குடி காலனியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஆட்டை திருடிக்கொண்டு வந்தனர்.
அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் 3 பேரும் தப்பிச்சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை அருகே அவர்களை மடக்கி பிடித்தார். பின்னால் வந்த ஏட்டு சித்திரைவேல் வழி தவறி சென்றதால் அவர் சப்-இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர தாமதமானது.
கொலை சம்பவம்
இதற்கிடையில் குளத்தூரில் வசிக்கும் தனது போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சேகருக்கு தகவல் தெரிவித்து வருமாறு கூறினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பூமிநாதனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையான இடத்திற்கு போலீஸ் உயர்அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அதன்பின் அவர் வசித்து வந்த சோழமாநகரில் அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள், குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செல்போன் எண் மூலம் விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர். கொலையான சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை சேதப்படுத்தி அருகில் உள்ள சுரங்கபாதையில் தண்ணீரில் வீசியிருந்தனர்.
இதில் அவரது செல்போன் எண்ணை வைத்தும், அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களில் சிக்னல் டவரில் பதிவானதை கொண்டும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் செல்போன் அழைப்பில் கடைசியாக பதிவாகி இருந்த ஒரு எண்ணை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆடு திருடியது தொடர்பாக தனது மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பிடித்து வைத்திருப்பதாக பேசியதாக அவர் கூறினார்.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து விசாரணையில் அந்த பெண்ணின் மகன் மணிகண்டன் (19) என்பதும், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
அவருடன் வந்த 2 பேரில் ஒருவர் புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பக்கம் அன்னாப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், மற்றொருவர் கே.புதுப்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் என்பதும் தெரிந்தது.
மாணவர்கள்
இவர்களில் ஒருவர் 9-ம் வகுப்பும், மற்றொருவர் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேலும் இவர்கள் 3 பேரும் கே.புதுப்பட்டியில் அவர்களது உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கே.புதுப்பட்டி விரைந்து சென்றனர்.
அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை மண்டையூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அரிவாள் பறிமுதல்
கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மற்ற 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க பணிகளை மேற்கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் 3 பேரும் உறவினர்கள்
கைதான 2 சிறுவர்களும் மணிகண்டனுக்கு உறவினர் ஆவார்கள். சம்பவத்தன்று தோகூர் பகுதியில் ஆட்டை திருடிக்கொண்டு மணிகண்டனும், 2 சிறுவர்களும் மோட்டார் சைக்கிளில் திருவெறும்பூர் பாதை வழியாக புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளனர். அப்போது தான் அவர்களை பூலான்குடி காலனியில் போலீசார் மறிக்க முயற்சித்தபோது தப்பிச்சென்று உள்ளனர். பின்னர் போலீசார் தேடுதல்வேட்டையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
கொலையாளிகள் சிக்கியது எப்படி?
சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம் போலீசார், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படைகளை ஒவ்வொன்றாக அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலைகளை பிரித்து கொடுத்தனர். அந்த வகையில் பூமிநாதனின் செல்போனில் பதிவான அழைப்பு எண் மூலம் துப்பு கிடைத்ததில் அதனை நூல்பிடித்து விறு, விறுவென விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தையும் கண்டறிந்து தூக்கினர். இந்த கொலை சம்பவத்தில் உண்மையான கொலையாளிகளை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story