மோதுவது போல் வந்த ராட்சத இரும்பு மிதவையால் பரபரப்பு
பாம்பன் பாலத்தில் மோதுவது போல் வந்த ராட்சத மிதவையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பாம்பன் ெரயில் பாலம் தப்பியது.
ராமேசுவரம்,
பாம்பன் பாலத்தில் மோதுவது போல் வந்த ராட்சத மிதவையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பாம்பன் ெரயில் பாலம் தப்பியது.
இரும்பு மிதவைகள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாகி விட்டதால் தற்போது உள்ள பாலத்தின் அருகில் வடக்கு கடல் பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ரெயில் பாலத்தை ஒட்டி உள்ள கடல் பகுதியில் ஏராளமான இரும்பு மிதவைகள் நிறுத்தப்பட்டு அதன்மீது கடலில் தோண்ட பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் கிரேன்கள் நிறுவப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் புதிய ரெயில் பால பணிகளுக்காக நேற்று கடலில் நிறுத்தப்பட்டு இருந்த இரும்பினாலான ராட்சத மிதவை ஒன்று கடல் நீரோட்டத்தின் வேகத்தால் இழுத்து வரப்பட்டு, நேற்று இரவு ரெயில் பாலத்தின் தூண்கள் மீது மோதுவது போல் நெருங்கி வந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கடலுக்குள் இருந்த பாறை மீது ஏறிய படி நின்றுவிட்டது..
சேது எக்ஸ்பிரஸ்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ராட்சத மிதவையை கிரேன் மூலம் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு 8.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பாம்பன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பாம்பன் ரயில் பாலத்துக்கு ராட்சத மிதவையால் ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சுமார் 1 மணிநேரம் தாமதமாக சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ெரயில் பாம்பன் ெரயில் பாலத்தை பயணிகளுடன் மெதுவாக கடந்து சென்றது. ஆனால், அதன்பின்னரும் மிதவையை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story