மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 22 Nov 2021 11:35 PM IST (Updated: 22 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன.

 மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, சாதி சான்று, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

இதில், 1,020 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

 சாதி சான்று வழங்க வேண்டும்

திருவண்ணாமலை அய்யம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த குடு குடுப்பைக்காரர்கள் சார்பில் அளித்துள்ள மனுவில், இந்தப்பகுதியில் 100 குடும்பங்கள் (குடு குடுப்பைக்காரர்கள்) வசித்து வருகின்றனர். 

இதில் 70 மாணவர்கள் படிக்கின்றனர். 41 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு கணிக்கர் பழங்குடியினர் சாதி சான்று வழங்க வேண்டும். 

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் வழங்கியவாறு எங்கள் மனுவை விசாரித்து எங்களுக்கு கணிக்கர் பழங்குடியினர் சாதி சான்று வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

திருவண்ணாமலை புதுமல்லவாடி கிராமம் கோடிகுப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், நாங்கள் தாழ்த்தப்பட்ட இந்து அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். 

எங்கள் கிராமத்தில் நீர் பிடிப்பு இடத்தில் வசித்து வருகிறோம். எங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசு இலவச வீடுமனை வழங்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். 

 அரசு சலுகை...

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி புதுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தானிப்பாடி கிராமத்தில் மலைக்குறவர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம். 

இதுவரை எந்த ஒரு அரசு சலுகையும் எங்களுக்கு கிடைத்தது இல்லை. சொந்த வீடு கிடையாது. சாதி சான்று வாங்கியது இல்லை. எனவே முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்திலாவது நாங்கள் பயனடைய உதவி செய்திட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story