சாலையோரம் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சாலையோரம் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 23 Nov 2021 1:22 AM IST (Updated: 23 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே சாலையோரம் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.

தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே சாலையோரம் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வீராசாமி தலைமையில், அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-

இலவச வீட்டுமனை பட்டா

பாவூர்சத்திரம் அருகே குணராமநல்லூரில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 20 குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல் சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் வறுமையுடன் வாழும் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
சாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளிலும் எங்களது குழந்தைகளை சேர்க்க முடியவில்லை. நாங்களும் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு சாதி சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாதி சான்றிதழ்

பூர்வீக மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் இசைவாணன் வழங்கிய மனுவில், புதிரை வண்ணார் சாதி சான்றிதழ் விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர், மண்டல துணை தாசில்தார் விசாரணை நடத்தி பரிந்துரை செய்த பிறகும் சாதி சான்றிதழ் நிராகரிக்கப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே இந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் விடுதலை கழக தலைவர் கணேசமூர்த்தி மீது ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து தொந்தரவு செய்வதாகவும், எனவே அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறி, தமிழ் தேசிய மக்கள் விடுதலை கழக மாவட்ட தலைவர் பால்ராசு மனு வழங்கினார்.

Next Story