குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும்- அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை


குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும்- அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2021 1:43 AM IST (Updated: 23 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தென்காசி:
குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குற்றாலம் சீசன்

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இடையே இதமான வெயில் அடிக்கும். குளிர்ந்த காற்று வீசும். மிகவும் ரம்மியமான சூழல் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்வார்கள்.
இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். வெளிநாட்டு பயணிகளும் இங்கு வந்து செல்கிறார்கள். சீசன் முடிந்த பிறகு சில நாட்களில் பருவமழை பெய்யும். அப்போதும் அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த நேரத்திலும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். மேலும் சபரிமலை சீசன் காலங்களில் அய்யப்ப பக்தர்கள் தவறாமல் குற்றாலத்தில் குளித்து செல்வார்கள். 

மருத்துவ குணம்

எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் இல்லாத சிறப்பு குற்றாலத்திற்கு உண்டு. குற்றாலம் அருவிகளில் எவ்வளவு நேரம் குளித்தாலும் உடலுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. மாறாக உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் கிடைக்கும். இந்த அருவி நீருக்கு மருத்துவ குணமும் உண்டு என்று வரலாறு கூறுகிறது. 
இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற குற்றாலத்தில் குளிக்க கடந்த 2 ஆண்டுகளாக கொேரானா கட்டுப்பாடுகளால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் குற்றாலத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள், வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story