ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 1:57 AM IST (Updated: 23 Nov 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

குழித்துறை, 
குழித்துறை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
வாலிபர்
களியக்காவிளை அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்த ரவியின் மகன் நிதின் (வயது 21). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் சனிக்கிழமை காலையில் நிதின் தனது நண்பர்கள் 4 பேருடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது வந்த வெள்ளப்பெருக்கில் நிதின் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
பிணமாக மீட்பு
உடனே குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பைபர் படகு மூலம் வாலிபரை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 2-வது நாளாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கடலில் முத்துகுளிக்கும் தொழிலில் ஈடுபடும் இனயம் பகுதியை சேர்ந்த 3 பேர் தேடியும் வாலிபரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக காலையில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிறிஸ்துராஜ் மற்றும் குழித்துறை தீயணைப்பு படையினர் ஆற்றில் படகில் சென்று நிதினை தேடினார்கள். அப்போது குழித்துறை ஆற்றில் காளை விழுந்தான் கோவில் அருகாமையில் கரையோரத்தில் வாலிபரின் உடல் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. உடனே தீயணைப்பு படையினர் நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதின் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் மற்றும் ஊர்மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story