அரியலூரில் 200 பேரை பலிகொண்டு அழியாத சுவடை ஏற்படுத்திய ரெயில் விபத்து
65 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரியலூரில் நடந்த ரெயில் விபத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் அழியாத சுவடாக உள்ளது.
அரியலூர்:
சென்னை- தூத்துக்குடி ரெயில்
இந்தியாவில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அதாவது கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு தூத்துக்குடி நோக்கி 12 பெட்டிகளுடன் ஒரு ரெயில் புறப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அப்போதைய திருச்சி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது.இதனால் அரியலூர் - சில்லக்குடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் அபாய அளவைத்தாண்டி தண்டவாளங்களை தொட்டபடி மழைநீர் சென்றுள்ளது. அந்த வழியாக வந்த ெரயில் பாதை பாதுகாப்பு ஊழியர் (கேங்மேன்) இருளில் தண்ணீரின் அளவு தெரியாமல் பாலத்தின் மேலே நடந்து சென்றுள்ளார். அவர் எந்தவிதமான எச்சரிக்கையையும் அரியலூர் ெரயில் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை.
ஆற்றில் கவிழ்ந்த பெட்டிகள்
இந்நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ெரயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன. இதற்கு காரணம் தண்டவாளங்கள் மட்டுமே அந்தரத்தில் தொங்கியிருக்கின்றன என்பது பின்பே தெரியவந்தது.அதிகாலையில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர். மழைநீர் வேகமாக சென்றதால் பலர் உடைந்த பெட்டிகளுடன் பல மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ரெயில் விபத்து நடந்த தகவல் சூரிய உதயத்திற்குப் பிறகே தெரியவந்தது.
ராஜினாமா செய்த மந்திரி
அருகில் உள்ள ராமலிங்கபுரம், ரசுலாபுரம், சில்லக்குடி, மேத்தால், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய சிலரை மீட்டனர். ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அவசரகால மீட்பு படையினர் விரைந்து வந்து ெரயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒரு சிலரை மீட்டதோடு, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை பயன்படுத்தி ஒரு சிலர் இறந்தவர்களின் உடல்களில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றதாக கூறப்பட்டது. அப்போது ெரயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ெரயில் விபத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலில் தானாக முன்வந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்தது இவர்தான்.
200-க்கும் மேற்பட்டவர்கள் சாவு
இந்த விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தவரான ராமலிங்கபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம்(வயது 84) கூறியதாவது:-
அப்போது எனக்கு 18 வயது இருக்கும். சம்பவத்தன்று மிக கனமழை பெய்தது. அப்போதெல்லாம் கிராமங்களில் மின்விளக்குகள், சாலைகள் கிடையாது. அன்று அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது. நானும், எனது நண்பர்கள் ராமர், துரைசாமி மற்றும் சிலரும் கையில் தீப்பந்தம் ஏந்திசென்று யார் வீட்டு சுவரேனும் இடிந்துள்ளதா? என்று வீதிகள்தோறும் சென்று பார்த்தோம். அப்படி இல்லாத நிலையில் எல்லோரும் படுத்துவிட்டோம்.சூரிய உதயத்திற்கு பிறகு எழுந்து பார்த்தபோது எங்கள் நிலத்திலேயே ெரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன. பலர் இறந்து கிடந்தனர். அழுகுரலும், காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டன. எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று எங்களால் முடிந்த உதவிகளை செய்து, ஒரு சிலரை காப்பாற்றினோம். ஒரு சிலரின் உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 200 பேருக்கு மேல் இறந்து இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story