நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் வீழ்ச்சி 450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் வீழ்ச்சி 450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் வீழ்ச்சி அடைந்து 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை விலை வீழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-470, ஐதராபாத்-422, விஜயவாடா-446, மைசூரு-455, மும்பை-485, பெங்களூரு-460, கொல்கத்தா-505, டெல்லி-510.
கறிக்கோழி கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84 ஆக உயர்ந்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
விற்பனை பாதிப்பு
முட்டை விலை வீழ்ச்சி குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக முட்டை வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வாகனங்கள் செல்லாததால், முட்டை வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆந்திரா மாநிலத்திலும் மழை காரணமாக முட்டைகளை அனுப்ப முடியாததால், கொள்முதல் விலையை 15 காசுகள் குறைத்துள்ளனர். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முட்டை வினியோகம் சரிவர இல்லாததால், பண்ணைகளில் கடந்த 2 நாட்கள் உற்பத்தியான சுமார் 7 கோடி முட்டைகள் இருப்பு உள்ளது. இதன் காரணமாகவும், கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை ஒரு வாரத்தில் சீராகி, முட்டை விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story