சென்னையில் 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு
சென்னையில் உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 55 கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
விபசார புகார்
சென்னையில் செயல்படும் சில மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. அதன்பேரில் சென்னையில் செயல்படும் மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் செயல்பட்ட 151 மசாஜ் கிளப்புகளில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நீடித்தது. உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு மசாஜ் கிளப்புகள் செயல்படுகிறதா?, என்று போலீசார் நடத்திய சோதனையில் ஆய்வு செய்யப்பட்டது.
63 கிளப்புகள் மீது வழக்கு
இந்த சோதனையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சோதனை நடத்தப்பட்ட மையங்களில் 23 மையங்கள் உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது கண்டறியப்பட்டது.
போலீஸ் சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, 55 மசாஜ் கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். 10 கிளப்புகள் உரிய உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இது போல் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story